Friday, February 25, 2011

தேவதைகளின் தேவதை.
தேவதைகளின் தேவதை.
***********************
எதற்காக
நீ கஷ்டப்பட்டுக்
கோலம் போடுகிறாய்.
பேசாமல்
வாசலிலேயே
சிறுது நேரம் உட்கார்ந்திரு
போதும்.
****************
நீ குளித்து முடித்ததும்
துண்டெடுத்து உன்கூந்தலில்
சுற்றிக் கொள்கிறாயே...
அதற்குப் பெயர்தான்
முடி சூட்டிக்கொள்வதா.
***************
தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப்போல
நீ ஒவ்வொரு முறையும்
சரிசெய்கிறாய்
உன் உடையை.
***************
இலைகள் காய்ந்தால்
உயிர் உள்ள கொடியும்
பட்டுப் போகிறது.
உன் உடைகள் காய்ந்தால்
உயிரற்ற கொடியும்
உயிர் பெறுகிறது.
**************
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்.....
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.

Monday, February 14, 2011

காதலர் தின வாழ்த்துக்கள்


Tuesday, December 21, 2010

எனக்கு இரண்டு காதலிகள்ஒருத்தி
உன் வீட்டில்
வசிக்கிறாள்

இன்னொருத்தி
என் இதயத்தில்
வசிக்கிறாள்
.................................................

உன்னைக்
கண் திறந்து
பார்க்கிறேன்

அவளை
கண் மூடிப்
பார்க்கிறேன்
.................................................

அவளைக்
கூட்டிக் கொண்டுதான்
உன்னைப்
பார்க்க வருகிறேன்

உன்னைப் பார்த்துவிட்டு
அவளோடுதான்
வீடு திரும்புகிறேன்
.................................................

உன்னிடம்
ஒருமுறை
காதலைச்
சொல்வதற்காக

அவளிடம்
ஓராயிரம்முறை
ஒத்திகை
பார்த்திருக்கிறேன்
.................................................

நீ அவளைப்
பார்க்கவேண்டுமென்றால்
சொல்
அனுமன்
தன் நெஞ்சைப் பிளந்து
ராமனிடமே
ராமனைக் காட்டியது மாதிரி
உன்னிடமே
உன்னைக் காட்டுகிறேன்
.................................................

Tuesday, October 19, 2010

உன் பேச்சு கா...தல்


Monday, October 11, 2010

காதல் ஆத்திச்சூடி


வளிடம் மயங்கு
..............................................
னக்கென்று பிறந்தவள் இந்த உலகத்தில்தான் இருப்பாள்.
அவளை நீ தேடாதே.

தேடிக் கண்டுபிடித்து விடக்கூடியவள் இல்லை அவள்.

உனக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு காதல் கணத்தில், சட்டென்று அவளே உன் கண் முன்னே தோன்றுவாள்.

அவ்வளவுதான்... உன் மதி மயங்கிப் போய்விடும். முதல்முறையாக உன் உடல்வேறு; மனம் வேறு என நீ இரண்டாகிப் போவாய்.

அதன்பிறகு... வானத்தைப் பார்த்தபடியே எங்கெங்கோ திரியும் உன் உடல்.
வாசலைப் பார்த்தபடியே, அவள் வீடிருக்கும் வீதியில் ஓர் ஆனந்த மயக்கத்தில் அசையாது கிடக்கும் உன் மனம்.

யாரிடமும் பேசாமல், யார் குரலும் கேட்காமல் திரியும் உன் உடலைக் கண்ட உன் நண்பர்கள் உனக்கு என்ன ஆயிற்று என்று அலசி ஆராய்ந்து, அவள் வீதியில் கிடக்கும் உன் மனத்தைக் கண்டெடுத்து வந்து உன் உடலிடம் கொடுப்பார்கள்.

அது அவர்கள் நட்பின் கடமை. உன் கடமை என்ன தெரியுமா?

உன் நண்பர்கள் கொண்டு வந்து கொடுத்த உன் மனதை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் அவள் வீடிருக்கும் வீதியில் விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வருவதுதான்.

நண்பர்கள் திட்டுவார்கள். திட்டிவிட்டுப் போகட்டும். அவர்களுக்கும் காதல் வரும்.

- தொடரும்...

 

Saturday, October 9, 2010

அடுத்த தொகுப்பு...
பொம்மையை நீ கொஞ்சாதே
அதற்கு உயிர் வந்துவிட்டால்
யார் வளர்ப்பது
----------------------------------------------------


ப்பைக் கொட்டியவர்கள்கூட
அள்ளிக்கொண்டு போகிறார்கள்
ஆனால் நீயோ உன்
உயர்தரப் புன்னகையைக் கொட்டிவிட்டு
அலட்சியமாய்ப் போகிறாயே

----------------------------------------------------

த்தனைக் குதிரைசக்தி கொண்டதோ
என்னைச் சுற்றிச் சுழலடிக்கும்
உன் குதிரைவால் கூந்தல்

----------------------------------------------------

நீ
சுவெட்டர் போட்டிருப்பது
உனக்குக் குளிராமல் இருக்கவா
இல்லை
ஊருக்குக் குளிராமல் இருக்கவா

----------------------------------------------------

தினந்தோறும்
குழந்தைக்கு ஆடை அணிவித்து
பள்ளிக்கு அனுப்பும் தாயைப்போல
ஒரு நாளாவது
உனக்கு ஆடை அணிவித்து
கல்லூரிக்கு அனுப்பவேண்டும்

----------------------------------------------------

நீயும் நீயும்
அடிக்கடி சந்தித்து
அப்படி என்னதான் பேசிக்கொள்வீர்கள்
கண்ணாடி முன்

என்னுரை ( என் எல்லாப் புத்தகங்களுக்கும்)


ன் கவிதைகளில் இருக்கிற அளவுக்கு சுவாரசியம் என் காதலில் இருக்குமா என்பது தெரியவில்லை.

ஊரில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்வரை காதலுக்கும் எனக்கும் இருந்த ஒரே சம்பந்தம்... எட்டாம் வகுப்புப் படிக்கும்போது ஒரு காதல் கடிதம் எழுதிக்கொடுத்ததுதான்.

என் கையெழுத்து கொஞ்சம் நன்றாக இருக்கும் என்பதால்... பலமுறை பெயிலாகிப் பெயிலாகி என்னுடன் படித்த பெரியண்ணன் ஒருவன் என்னை எழுதித் தரச் சொன்னதால், அவன் சொல்லச் சொல்ல எழுதித் தந்திருக்கிறேன். அவ்வளவுதான்.

ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து, நான் பட்டப் படிப்புக்காக காந்திகிராமம் சென்றபோது... அங்கே காதல் தன் முழுப் பரிவாரங்களோடு காத்திருந்தது, என்னை ஆட்கொள்ள.

அவள் அழகி இல்லை; பேரழகியும் இல்லை; அதற்கும் மேல். ஒருத்தியை ஒருவன் காதலிக்கலாம்; அல்லது இருவர் காதலிக்கலாம். ஆனால் ஒரு கல்லூரியே காதலிக்குமா? காதலித்தது அவளை. ஆனால் அவளோ எல்லோரையும் தூசி மாதிரி பார்த்தாள்.

இத்தனைக்கும்... நான் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த போது அவள் படித்துக்கொண்டிருந்ததோ, பக்கத்திலிருக்கும் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு. அவள் அம்மா எங்கள் கல்லூரியில் பணியில் இருந்ததால் அவள் வீடு கல்லூரிக்குள் இருந்தது.

மாலை நேரங்களில் எங்கள் கல்லூரி மைதானத்தில் தான் தன் தோழிகளோடு அவள் கைப்பந்து விளையாடுவாள். அப்போதெல்லாம் எந்தப் பையனாவது அவளிடம் பேச முயற்சித்தால் திட்டி அனுப்பி விடுவாள்.
ஆனாலும் அவளிடம் பேசுகிற பாக்கியத்தை ஒருவன் பெற்றிருந்தான். அவன் பெண்களின் ஊழியன். எந்தப் பெண் எது சொன்னாலும் உடனே கடைக்குப் போய் வாங்கி வருபவன்.

அவன் அவளிடம் பேச ஆரம்பித்ததை நினைத்து யாருமே வருத்தப்படவில்லை. மாறாக மகிழ்ச்சியே அடைந்தனர். அவன்மூலம் அவளிடம் தங்கள் காதலைத் தெரியப் படுத்திவிடலாம் என்று நினைத்து.
அவள் விளையாடிவிட்டுப் போனதும், அவனை அழைத்து நடுவே உட்காரவைத்து `எங்களில் யார் பேராவது அவளுக்குத் தெரியுமா?' என்று கேட்பார்கள்.

`எனக்குத் தெரியாது' என்பான் அவன்.
`நீ கேட்க வேண்டியதுதானே?' என்பார்கள்.
`எப்படிக் கேக்கறது' என்பான்.
`சரி... நீ சொல்ல வேண்டியதுதானே?' என்பார்கள்.
`எப்படிச் சொல்றது?' என்பான்.

எல்லோரும் மௌனமாகிவிடுவார்கள். நானும் அந்தக் கூட்டத்தில்தான் இருப்பேன் என்றாலும், என்னை இந்த விஷயத்தில் என் நண்பர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஏனென்றால் நான் அவளைப் பற்றி ஒரு வார்த்தைகூட ஒருபோதும் பேசுவதில்லை. எனக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லை என்பதுபோல் இருப்பேன். ஆனாலும் அந்தக் கூட்டத்தில் இருப்பேன்... மௌனமாய் அவளைப் பார்த்தபடி...

கல்லூரிக்குள் இருக்கும் மளிகைக்கடையில் நான் ஏதாவது வாங்க நிற்கும்போது அவள் வந்தால், நான் ஒதுங்கிக் கொள்வேன். மற்ற நண்பர்களோ பக்கத்திலேயே நின்று வழிந்துகொண்டிருப்பார்கள்.

அவள் ஓர் அழகான சிவப்புச் சைக்கிள் வைத்திருந்தாள். கடைத் தெருவுக்குப் போவதற்காக விடுதிப் பெண்கள் கேட்டால் மட்டும் அதைத் தருவாள். அதற்கு வசதியாக அவள் விளையாடும் போது சாவியை ஊழியன் கையில் கொடுத்து விடுவாள். அவனிடமிருந்து பெண்கள் வாங்கிப் போய், திரும்ப வந்து கொடுப்பார்கள்.

அப்படித்தான் அன்றும் யாரோ ஒருத்தி அவனிடம் சாவி வாங்கிக் கொண்டு எங்கோ போய்த் திரும்பி வருகையில் அவன் இல்லாததால், அந்தப் பெண் சாவியை யாரிடமோ கொடுத்துவிட்டாள். அது அவள் கைக்குப் போய்ச் சேராததால், சாவி தொலைந்துவிட்டதாக எண்ணித் தேடிக் கொண்டிருந்தாள்.
இது தெரிந்து எங்கள் கூட்டம் அந்த மைதானத்தையே சலிக்க ஆரம்பித்துவிட்டது. சாவியைக் கண்டுபிடித்து அவள் இதயத்தில் இடம் பிடித்து விடலாம் என்கிற ஆசையில்... எங்கோ போயிருந்த ஊழியன் திரும்பி வந்து தேட ஆரம்பித்து... சாவியைக் கண்டுபிடித்தான். இந்தக் களேபரங்கள் எல்லாவற்றையும் மைதானத்தின் ஒரு மூலையில் அமர்ந்தபடி நான் மௌனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் என் மௌனமெல்லாம் தொலையப் போகிறது என்பது தெரியாமல்.
எல்லாம் முடிந்தபிறகு, ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தபடி என்னருகில் வந்த பெண்களின் ஊழியன், `டேய் ஒரு விஷயம் தெரியுமா... சாவியைத் தேடும்போது... சங்கர்கிட்ட இருக்கான்னு கேளுன்னு அவள் சொன்னாடா' என்றான்.

அவ்வளவுதான்... என் இதயத்தில் காதல் வெடித்துப் பூத்துவிட்டது. என் பெயர் அவளுக்குத் தெரியுமா? சாவி என்னிடம் இருக்கும் என்று அவள் நினைத்திருக்கிறாள் என்றால், நான் அதை வைத்துக் கொள்ள ஆசைப்பட்டி ருக்கிறேன் என்று அவள் நினைத்திருக்கிறாளா  என்று எனக்குள் எண்ணற்ற கேள்விகள் முட்டி மோதும்போது ``டேய் அவளுக்கு உன்னைத் தெரிஞ்சிருக்குடா'' என்றான் அவன். எப்படிடா என்று கேட்கத் துடித்தேன் நான். ஆனால் கேட்காமல் நின்றேன். அதுதான் நான்.

நெஞ்சில் தீப்பற்றிக்கொண்டது. உடலெங்கும் பரவசம் பரவியது. இரவு வந்தது தெரியாமல் அந்த மைதானத்திலேயே அமர்ந்திருந்தேன். கடைசியில் காதல் என்னையும் ஆசிர்வதித்துவிட்டது. ரசனைகள் பூத்தன. கவிதைகள் பிறந்தன.
ஆனால்... கடைசிவரை அவளிடம் என் காதலைச் சொல்லவே இல்லை. இதற்குமுன் காதலைச் சொல்லப்போன என் நண்பர்களிடம் அவள் நடந்து கொண்டதைப் போலவே என்னிடமும் நடந்துகொள்வாளோ என்கிற தயக்கம். அதிலேயே ஓடிவிட்டன மூன்று வருடங்கள். அவளை விட்டுவிட்டு வந்துவிட்டேன்.

ஆனால்... ஆனால்... அவளால் எனக்குள் பதியமிடப்பட்ட காதல் என்னை விடவில்லை. பதினாறு வருடங்கள் ஆனபிறகும். தினம் ஒரு கவிதையை... தினம் ஒரு காட்சியை... கனவாக... கற்பனையாக எனக்குள் பூக்கவைத்துக் கொண்டே இருக்கிறது காதல்.

அன்று என் இதயத்தில் நுழைந்தவளை... இன்று என் இதயமாகவே மாற்றிவிட்டது காதல்.

என்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றிலும் அவளைப் பார்க்கக் கற்றுக்கொடுத்து விட்டது காதல். எங்கோ இருப்பவளை எங்கும் இருப்பவளாக ஆக்கித் தந்திருக்கும் காதல்... கடைசியில் என்னையே கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாகவே மாற்றிக் கொண்டிருக்கிறது.

காதல்தான் என் குணம்.
காதல்தான் என் மதம்.
காதல்தான் என் புகழ்.

ஆம்...
என் எல்லாப் புகழும்
காதலுக்கே!

தபூ சங்கர்
---------------------------------------

 நூல் கிடைக்குமிடம்...
விஜயா பதிப்பகம்
20 ,  ராஜ வீதி, கோயம்புத்தூர்
பேச... 0422-2394614, 2382614


விலை : ரூ.80/-