Friday, October 8, 2010

இனிப்பெடுத்துக் கொள்ளுங்கள் காதல்பிறந்திருக்கிறது

கவிஞர் பழநிபாரதியின் அணிந்துரை...

ள்ளியெடுத்துக் கொஞ்சத் தோன்றும் அழகு...
வெளிச்சம் ஊடுருவும் நிறம்...
குழந்தையின் உள்ளங்கை மென்மை...
கற்களில் கூழாங்கற்களுக்கு மட்டும்
எப்படி  வந்தது  இந்த அழகு?

நீருக்குத் தன் பிரியத்தை வெளிப்படுத்தத் தெரியாமல் நீரின் பாதையிலேயே கிடந்து உருண்டு புரளும் இரகசியம்தான் கூழாங்கல்லின் காலத்தை வென்ற அழகு. சொல்ல மறந்த காதல் கவிதைகளுக்கும் இலக்கியத்தில் இப்படித்தான் ஒரு மெருகு கூடுகிறது.

நீ வந்துவிடாதே
இந்த வேதனையை அனுபவிக்க விடு
இதுவும்
சுகமாய்த்தான் இருக்கிறது

இது ஒரு கஸல் கவிதை. இந்தச் சுகமான வேதனைகள்தாம் சங்கரின் கவிதைகள். செடிக்குத் தெரியாமல் பூத்த `கைக்கிளை'ப் பூக்கள் இவனது மூச்சில் நறுமணம் பரப்புகின்றன. இவன் இதயத்தைப் பூவாளியாக்கி உயிரூற்றிக் கொண்டிருக்கிறான்.

நீ எனக்கில்லை என்றாலும்
என்னிடம் இருப்பதெல்லாம்
நீதான்

என்கிறான். 

அன்பில் ஒழுகும் வாழ்வில், சங்கரின் கவிதைகளில் வெளிப்படும் இந்த பாவனைகள்தாம் மிக முக்கியமானவை.

``துவாரகையிலே என்னைச் சேர்த்துவிடுங்கள். கண்ணனின் பொன்னாடையை என் காதல் நோய் தீர என் மீது போர்த்துங்கள். அவனது குளிர்ந்த திருத்துழாயை எனது கூந்தலில் சூட்டுங்கள். அவனது துளசிமாலையை என் மார்பிலே வெப்பம் தீரப் போட்டுப் புரட்டுங்கள். அவனது அமுதத் திருவாயில் ஊறிக் கிடக்கிற எச்சிலைக் கொண்டு நான் பருகும்படி செய்து என் இளைப்பினை நீக்குங்கள். அவனது புல்லாங்குழலின் துளைகளில் உண்டாகிற இசைநீரை என் முகத்திலே குளிர்ச்சியாகத் தெளியுங்கள். அவனது திருவடி பட்ட காலணியைக் கொண்டுவந்து பிரியாத உயிருடைய என் உடம்பிலே பூசுங்கள்.
அவனைக் கண்டால், அவனை அணைக்காமல், நுகராமல் உள்ள என் முலைகளை வேரோடு பிடுங்கி, அவனது மார்பிலே எறிந்துவிட்டு என் துயரைப் போக்கிக்கொள்வேன். தன் மார்பிலே என்னை அவன் சேர்த்துக்கொண்டால் நல்லது; ஒருநாள் என் முகம் பார்த்து, `நீ எனக்கு வேண்டாம் என்று உண்மை சொல்லி விடை கொடுப்பானானால் அது மிக நல்லது' என்று ஆண்டாள் பக்தியைக் காதலாக்கியது இந்த பாவனைகள்தாம்.
இங்கே சங்கர் காதலை பக்தியாக்கி அவளை அம்மையாகவும் தேவதையாகவும் ஆக்கிப் பார்க்கிறான்.


நேரிலோ கற்பனையிலோ
தேவதை தோன்றும்போது
அதை தரிசிப்பதைத் தவிர
வேறென்ன வேண்டும்
பக்தனுக்கு

என்று கேட்கிறான்.

இந்த பாவனைதான் இலக்கியத்தை இனிப்பாக்குகிறது. அதன்வழி வாழ்க்கையை இனிப்பாக்குகிறது. அது நிஜமோ நிழலோ இருந்துவிட்டுப் போகட்டும். நமது வெறுஞ் சோற்றைக்கூட நிலாச்சோறாக உண்ணும் சுகம் வேறெதில் கிடைக்கும்?

மழையில் நனைந்த குழந்தையினை
தன் முந்தானையால் துடைத்துவிடும்
ஒரு தாயை
மழையில் நனைந்தபடியே
பார்த்துக்கொண்டிருக்கும்
ஒரு தாயில்லாத சிறுவனைப்போல
கடற்கரையிலும் பூங்காக்களிலும்
இணை இணையாய் அமர்ந்திருக்கும்
காதலர்களைப் பார்த்தபடி
தன்னந்தனியே நிற்கிறது
உனக்கான என் காதல்

என்று சங்கரின் காதல் தேடலோடு காத்திருக்கிறது. ஒலியால் திறக்கப்படாத மௌனம், உளியால் செதுக்கப்படாத பாறை, கடலை அடைந்து விடாத நதி, தொடமுடியாத தொடுவானம், எங்கே தூறும் என்று தெரியாத மேகம், எங்கிருந்து வீசுகிறதென்று புரியாத காற்று இவையெல்லாம் தேடலில் இருப்பதாலேயே நமக்குத் தொடர்ந்து கிடைக்கிற அழகுகள். அப்படித்தான் சொல்லப்படாத காதலும்.

``கோடரி, மரத்திலிருந்து ஒரு பிடி கேட்டது. மரம் அப்படியே கொடுத்துவிட்டது. ஐயோ! கோடரிக் காம்பே!'' என்று தாகூர் எழுதினார். காதலும் அப்படித்தான். அதில் வீழ்தல் மட்டுமே உண்டு; எழல் இல்லை. அது ஆண்மையிடம் பெண்மையும் பெண்மையிடம் ஆண்மையும் விரும்பி அடைகிற சரணாகதி. அது அடுத்தவர்க்காக சுவாசிக்கும் மூச்சுப் பயிற்சி.


கலீல் ஜிப்ரான் நேரில் சந்திக்காத தனது காதலியோடு கடைசிவரை கடிதங்களாலேயே வாழ்ந்துகொண்டிருந்தான்.


``மிகத் தூரத்தில் இருக்கும் தோழன் சமயங்களில் மிக அருகில் இருப்பவனை விடவும் நெருக்கமானவனாகித்தான் போகிறான்.

மலையிலேயே குடியிருப்பவனை விடவும் பள்ளத்தாக்குகளில் நடந்துபோகிறவன் மலையை நன்றாகப் பார்க்க முடிகிறதல்லவா?


நான் சொல்ல விரும்பும் அந்த வார்த்தையை மௌனத்தின் இதயத்தில் வைத்துவிட்டேன். நாம் பிரியத்தோடும் எழுச்சியோடும் நம்பிக்கையோடும் சொல்லாததை மௌனம்தானே பாதுகாத்துப் பொத்தி வைக்கிறது. மௌனம் நமது பிரார்த்தனைகளை எங்குவேண்டுமானாலும் கொண்டு போகும் அல்லது கடவுளை நோக்கி அழைத்துப்போகும். மலைச் சாரலில் நடந்து `` நீ என் தோழி... நீ என் தோழி...' என்று சொல்லிக் கொண்டிருப்பதே போதும்.


``அன்பே! இன்று கொண்டாடுவது உன் பிறந்த நாளை. உன்னைக் கொண்டாடும்போது வாழ்வையே கொண்டாடு கிறோம்'' என்றெல்லாம் கடிதவரிகளில் அவன் காதலை வாழ்ந்தான்.

நீ என்னை விட்டு
எவ்வளவு தொலைவில் இருக்கிறாயோ
அவ்வளவு தொலைவிற்கும்
காதல் என்னைச் சூழ்ந்திருக்கிறது


என்கிற சங்கர் `இனிப்பெடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது' என்று நம்மையெல்லாம் அழைக்கிறான். அந்தக் காதலின் குரலும் இனிப்பாக இருக்கிறது.

எடுத்துக்கொள்வோம்... காதலின் சுவையால் பூமி தித்திக்கட்டும்.
 
என்றென்றும் அன்புடன்
பழநிபாரதி

--------------------------------------------------
நூல் கிடைக்குமிடம்...
விஜயா பதிப்பகம்
20 ,  ராஜ வீதி, கோயம்புத்தூர்
பேச... 0422-2394614, 2382614


விலை : ரூ.80/- 

18 comments:

 1. வலையுலகில் பிறந்திருக்கும் இந்த காதலுக்காக நாங்கள் நிச்சயம் இனிப்பெடுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. சார் நிஜமாவே உங்க ப்ளாக்கா இது..?

  ReplyDelete
 3. ஹாய்.. தபு சங்கர் சார்.. இது உங்களுடைய பிளாக் தானா? உங்களை வலைப்பூவில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது.

  ReplyDelete
 4. என்னுடைய பிளாக்தான் ...
  தங்களின் பார்வைக்கு நன்றி...

  ReplyDelete
 5. நன்றி சார் வலையுலகத்திலும் கொடிகட்டி பறக்க வாழ்த்துக்கள்..
  பல தடவை உங்க பெயரை Googleல தேடியிருக்கேன்..
  இந்த ப்ளாக்ல பாலோயர் ஆயிட்டேன்..

  ReplyDelete
 6. sankar sir unga devathaikalin devathai padichitu unga rasigan aaiten . niraiya eluthunga sir vaazhthukal.

  ReplyDelete
 7. Ayyo nijamavae ithu unga block thana.. i'm so happy sir..

  ReplyDelete
 8. sir ,very nice ,so many time i search you,now i catched

  ReplyDelete
 9. எத கேட்டாலும் பதில
  தரீங்களே
  பதில கேட்டா என்ன
  தருவீங்க.?

  ReplyDelete
 10. இந்த புத்தகத்தை நான் முழுமையாக படித்திருக்கிறேன். தற்போது உங்கள் வலைப்பூவையும் கண்டது மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்....
  http://puthiyaulakam.com

  ReplyDelete
 11. ayo na first kavidhai ah virumba karaname unga eluthukkal than sir unga kavidhai elame superb..thank you so much for ur blogpost and best wishes...

  ReplyDelete
 12. sir, im really happy to see you. you are superb. i love you.

  ReplyDelete
 13. Very nice to read and feel .

  no words to express our feeling.

  But only u are having that blessings.

  You rock!

  ReplyDelete
 14. உங்களுடைய வரிகள் என்றால் ஒரு ஈர்ப்பு

  நான் படித்த உங்களின் முதல் படைப்பு "இனிப்பு எடுத்து கொள்ளுங்கள் காதல் பிறந்து இருக்கிறது" எனப்து தான்

  உங்களின் முதல் படைப்பிலயே உங்கள் வரிகளின் ரசிகை ஆகிவிட்டேன்

  தொடரட்டும் உங்களின் படைப்பு எங்களை போன்றோர்களுக்காக

  ReplyDelete
 15. முதல் முறையாக உங்கள் வரிகளை படிக்கிறேன்.....,நான் மகிழ்ச்சியில்

  ReplyDelete